IND vs SL, 2nd Test (DAY 1): வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; 252 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. பெங்களூரில் இன்று முதல் பகலிரவு ஆட்டமாக 2ஆவது டெஸ்ட் தொடங்கியுள்ளது. பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் நடைபெறும் 3ஆவது பகலிரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு கொல்கத்தா, ஆமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியில் நிசாங்கா, லஹிரு குமாராவுக்குப் பதிலாக குசால் மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரமா அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சுரங்கா லக்மல் விளையாடும் கடைசி டெஸ்ட் இது.
மயங்க் அகர்வால் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்டின் முதல் நாள், முதல் பகுதியிலேயே ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியதால் ரன்கள் எடுப்பதும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. 81 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, 31 ரன்களில் ஜெயவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆர்சிபி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற கோலி, 2 பவுண்டரிகளுடன் சரியாக எகிறாத பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் எடுத்தார். முதல் நாள் முதல் பகுதியில் (தேநீர் இடைவேளை) இந்திய அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 16 ரன்களுடனும் ஷ்ரேயஸ் ஐயர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு விரைவாக ரன்கள் அடிக்க ஆரம்பித்தார் ரிஷப் பந்த். இதனால் வரிசையாக பவுண்டரிகள் கிடைத்தன. 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்த பந்த், எம்புல்டெனியா பந்துவீச்சில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டையும் எம்புல்டெனியா வீழ்த்தினார். இதன்பிறகு வந்த அஸ்வின் 13 ரன்களில் டி சில்வா பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்த ஸ்ரேயஸ் ஐயர், 54 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
ஒருமுனையில் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாட மறுமுனையில் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இறுதியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரனளில் ஆட்டமிழந்து வாய்ப்பை தவறவிட்டார்.
இதன் காரணமாக முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களைச் சேர்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இலங்கை தரப்பில் லசித் எம்புல்டெனியா, பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.