IND vs SL, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் பிரமாண்ட சதம்; இலங்கைக்கு 229 டார்கெட்!

Updated: Sat, Jan 07 2023 20:37 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் கில்லுடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

இதில் 16 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி 2 சிக்சர், 5 பவுண்டரி என 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்து முதலே வானவேடிக்கை காட்ட தொடங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் அரைசதத்தை நோக்கி நெருங்கிய வேலையில் 36 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி என 46 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் தலா 4 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஆனால் தனது அதிரடியை சற்றும் குறைக்காத சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் தனது 3ஆவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவருடன் இணைந்த அக்ஸர் படேலும் தனது பங்கிற்கு ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 112 ரன்களைச் சேர்த்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை