IND vs SL : பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா; இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
முன்னதாக கரோனா தொற்று பரவல் காரணமாக 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, சேதன் சக்காரியா ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இடம்பிடித்தனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் - ருதுராஜ் கெய்க்வாட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் கெய்க்வாட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல்லும் 29 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷிகர் தவானும் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 7 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.