பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வெல்லும் - முகமது ஷமி நம்பிக்கை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதனால், மூன்றாவது முறையாகவும் இந்திய அணி இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற கருத்துகளை ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணயின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தவரிசையில் தற்சமயம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இணைந்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணில் இரண்டு முறை வீழ்த்தி தொடரை வென்றுள்ளோம். 2018 மற்றும் 2020-21 இல். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இத்தொடரை கைப்பற்றியுள்ளோம். நாங்கள் அப்படிச் செய்வோம் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதனால் இம்முறை அவர்கள் எங்களை எதிர்கொள்வது குறித்து நிச்சயம் ஏதெனும் ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஏனெனில் இத்தொடரை வெல்லும் வாய்ப்பானது இந்தியாவிடம் உள்ளது. அதன் காரணமாக நிச்சயம் ஆஸ்திரேலிய வீரர்கள் கவலையில் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஷமியின் இந்த கருத்தானது தற்சமயம்ம் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் கடந்தாண்டு நடந்து முடிந்த ஒருநாள் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவரது காயம் இதுவரை குணமடையாத காரணத்தால் முக்கியமான தொடர்களில் இருந்து அவர் விலகினார். மேற்கொண்டு எதுர்வரும் வங்கதேச மற்றும் நியூசிலாந்து தொடர்களிலும் முகமது ஷமி இடம்பிடிக்க மாட்டார் என்றும், பார்டர் கவாஸ்கர் தொடரில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.