SA vs IND: இந்திய அணி நிச்சயம் வெல்லும் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் செவ்வாய் கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் தலா 1-1 என்று வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது டெஸ்ட், இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற கட்டம் தான்.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி கேப் டவுனில் இதுவரை வென்றதே இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் 2007ஆம் ஆண்டு மோசமான அனுபவமாக கேப் டவுன் இருந்தது. அங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வென்றது இல்லை என்பதை அறிவேன். ஆனால் இம்முறை நிலைமை மாறும். இந்தியா நிச்சயம் கேப் டவுன் டெஸ்டில் வெல்லும்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் அடித்தால் நிச்சயம் வெற்றி பெறும். 400 ரன்களை கடக்கும் அளவுக்கு நமது வீரர்களிடம் திறமை உள்ளது. இதனால் இந்தியா மீது என் மொத்த பணத்தையும் போட தயார். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வலுவாக இல்லை. பவுமாவுக்கு பிறகு வேறு எந்த பேட்ஸ்மேனும் இல்லை
குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த அணி பலவீனமாக மாறிவிட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டை இந்தியா எளிதில் வீழ்த்தி விடலாம். கடைசி டெஸ்டில் முகமது சிராஜ்க்கு காயம் குணமடைந்தால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையேனில் இஷாந்த், உமேஷ் யாதவ்க்கு வாய்ப்பு தரலாம்”தெரிவித்தார்.