IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!

Updated: Sun, Oct 06 2024 22:05 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது.

அதன்படி இன்று குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இதிய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் மயங்க் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைனும் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 14 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் - தாவ்ஹித் ஹிரிடோய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 12 ரன்களில் ஹிரிடோய் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா மற்றும் ஜக்கார் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

பின்னர் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிரஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடி வந்த ரிஷாத் ஹொசைன் 11 ரன்களிலும், தஸ்கின் அஹ்மத் 12 ரன்களிலும், ஷொரிஃபுல் இஸ்லாம் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹிதி ஹசன் மிராஸ் 35 ரன்களைச் சேர்க்க, வங்கதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அபிஷேக் சர்மா 16 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

பின்னர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 29 ரன்களை எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி - ஹர்திக் பாண்டியா இணையும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் வெற்றியும் எளிதானது. இதில் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ளிய ஹர்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் இந்திய அணியானது 11.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை