டெஸ்டில் அதிரடி காட்டுவது என்பது இந்தியர்களின் மரபுவழி அல்ல - தினேஷ் கார்த்திக்!

Updated: Thu, Dec 15 2022 10:41 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், முதலில் களமிறங்கும் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபடும் எனக் கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை 41/0 என இருந்த இந்திய அணி திடீரென்று 48/3 என படுமோசமாக திணறியது.

இதற்கு காரணம் ஓபனர்களின் சொதப்பல்தான். டெஸ்டில் டி20 ஷாட் ஆட முற்பட்ட ஷுப்மன் கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் அருகிலேயே கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். தொடர்ந்து கேஎல் ராகுல் 22 ரன்களோடு வெளியே சென்ற பந்தை வம்புக்கு அடிக்க முற்பட்டபோது, பந்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்ட் ஆனது. அடுத்து, விராட் கோலி, தைஜுல் இஸ்லாமின் பந்துவீச்சை கணிக்க தவறி தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 

இதனால்தான், இந்தியா 41/0 என்பதில் இருந்து 48/3 எனத் திணறியது. இதனைத் தொடர்ந்து புஜாரா 90, ரிஷப் பந்த் 46 ஆகியோர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 319 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இப்போட்டி துவங்குவதற்கு முன் பேட்டிகொடுத்திருந்த இந்திய அணிக் கேப்டன் கே.எல்.ராகுல், ‘‘இங்கிலாந்து அணி டெஸ்டில் அதிரடியாக விளையாடியது போல, நாங்களும் வங்கதேச டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடுவோம்” எனக் கூறியிருந்தார். ஆனால், இந்திய அணியில் ரிஷப் பந்தை தவிர வேறு யாரும் அதிரடியாக செயல்படவில்லை.

இந்நிலையில் தற்போது, இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “வங்கதேச மைதானங்கள் பேட்டர்களுக்கு சாதகம் என்பதால், போட்டிகள் பெரும்பாலும் டிராதான் ஆகும். அப்படி டிரா ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால்தான், அதிரடியாக ரன்களை குவித்து, வெற்றிபெற வாய்ப்பை உருவாக்குவோம் என கே.எல்.ராகுல் கூறியிருப்பதாக பார்க்கிறேன்.

டெஸ்டில் அதிரடி காட்டுவது என்பது இந்தியர்களின் டிஎன்ஏ- விலேயே கிடையாது. நாம் மரபுவழி அப்படியல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்டாக மட்டும்தான் விளையாடும் ஆற்றல் இருக்கிறது. அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்து களமிறங்கினாலும், நாம் வழக்கமான டெஸ்டைத்தான் விளையாடுவோம்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை