IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 56 ரன்களையும், நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - டேரில் மிட்செல் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர். அதன்பின் மூன்றாவது ஓவரை வீசிய அக்சர் படேல், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மார்ட்டின் கப்தில் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். இதனால் 17.2 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: T20 World Cup 2021
இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.