IND vs SL, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் கில்லுடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதில் 16 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி 2 சிக்சர், 5 பவுண்டரி என 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்து முதலே வானவேடிக்கை காட்ட தொடங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் அரைசதத்தை நோக்கி நெருங்கிய வேலையில் 36 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி என 46 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் தலா 4 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனால் தனது அதிரடியை சற்றும் குறைக்காத சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் தனது 3ஆவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவருடன் இணைந்த அக்ஸர் படேலும் தனது பங்கிற்கு ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 112 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர். இதில் 15 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்கா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். பின் அதிரடியாக விளையாட முயற்சித்த குசால் மெண்டிஸும் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்த தனஞ்செய டி சில்வா 22, சரித் அசலங்கா 19, வநிந்து ஹசரங்கா 9 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, கடந்த இரு போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தி கேப்டன் தசுன் ஷனகா தனது பங்கிற்கு ஒரு சில சிக்சர்களை மட்டும் பறக்கவிட்டு 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, 16.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.