இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது சந்தேகமே - மைக்கேல் வாகன்!
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டதால் கோப்பையை வெல்லும் என்றெல்லாம் அந்த தொடருக்கு முன்பாக பேசப்பட்டது.
ஆனால் அந்த தொடரின் லீக் போட்டிகளிலேயே இந்திய அணி அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக ரோஹித் சர்மா தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
எனவே இந்த டி20 உலக கோப்பை தொடரை கட்டாயம் இந்திய அணி கைப்பற்றியாக வேண்டிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக அணியில் பல மாறுதல்களை செய்து பலமான அணியாக வடிவமைத்து வருகிறது.
அதேபோன்று ஒவ்வொரு அணியும் தங்களது அணியை உலகக்கோப்பை தொடருக்காக தயார் செய்து வரும் வேளையில் இந்திய அணியின் வலிமையை பற்றியும் அதில் உள்ள வீரர்கள் பற்றியும் பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் உள்ள வீக்னஸ் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர் அதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனாலும் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் தற்போது உள்ள இந்திய அணியை வைத்து அவர்களால் உலககோப்பையை வெற்றி பெற முடியுமா என்று கேட்டால் அதனை உறுதியாக கூற முடியாது.
ஏனெனில் இந்திய அணியில் பல அற்புதமான வீரர்கள் இருந்தாலும் தற்போதுள்ள அணியில் பவுலிங் ஆப்ஷனை பொறுத்தவரை வருத்தம் அளிக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணியில் பவுலிங் ஆப்ஷன் கொண்ட சில பேட்ஸ்மேன்களையும் சேர்த்தால் மட்டுமே ஒரு போட்டியில் ஏதாவது ஒரு பந்துவீச்சாளர் சறுக்கும்போது அதனை கைகொடுத்து தாங்க முடியும்.
ஆனால் தற்போது உள்ள அணியை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பவுலர்களை மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. இதனால் என்னைப் பொறுத்தவரை இந்திய அணி உலககோப்பை தொடரை கைப்பற்றுமா எண்ணென்று கேட்டால் அது பெரிய சந்தேகம் தான்” என தெரிவித்துள்ளார்.