ஒயிட் வாஷான பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த அஜ்மல்!

Updated: Wed, Jul 14 2021 20:47 IST
‘India & England have two teams now, our one is struggling’: Ajmal lashes out at Pakistan (Image Source: Google)

பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே, நடந்த முதல் இரு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் பாகிஸ்தானை பந்தாடியது.

பிர்மிங்கமில் நடைபெற்ற இப்போட்டியில், எப்படியாவது ஆறுதல் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. 

அந்த அணியின் கேப்டன் பாபர் அசம் நேர்த்தியாக விளையாடி, 139 பந்துகளில் 158 ரன்கள் எடுத்தார். இதில், 14 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், இமாம்-உல்-ஹக் 56 ரன்களும், ரிஸ்வான் 74 ரன்களும் எடுத்து பாபருக்கு பக்கபலமாக இருந்தனர். 

இதையடுத்து, 332 ரன்களை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும், லெவிஸ் 77 ரன்களும் குவிக்க, 48வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகளையும் வென்று 3-0 என்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி

எனினும், ஒரேயொரு ஆறுதலாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதாவது, குறைந்த ஒருநாள் போட்டிகளில் 14 சதம் விளாசிய என்ற பேட்ஸ்மேன் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 26 வயதான பாபர் 81 போட்டிகளில் 14 சதங்களை அடித்திருக்கிறார். ஹசிம் ஆம்லா 84 போட்டிகளிலும், டேவிட் வார்னர் 98 போட்டிகளிலும், விராட் கோலி 103 போட்டிகளிலும் 14 சதங்களை நிறைவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறுகையில் "பாபர் அசாம் 81 இன்னிங்ஸ்களில் 14 சதங்களை அடித்திருக்கிறார். நான் இப்போது என்ன சொல்ல வேண்டும்? ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடிய பிறகும், அவர் விரக்தியடைந்து பெவிலியனுக்கு திரும்ப வேண்டியிருந்தது. இது எனக்கும் நடந்தது. நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவேன், ஆனால் பாகிஸ்தான் தோற்றுவிடும். நான் சிறப்பாக விளையாடும் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே பார்க்க முடியும்.

பந்துவீச்சில் கூட, இரண்டு அல்லது மூன்று பந்து வீச்சாளர்களைத் தவிர, தரம் வாய்ந்த பவுலர்களாக நான் யாரையும் நான் காணவில்லை. இப்படி இருந்தால் நாம் எப்படி கிரிக்கெட்டில் நீடித்திருப்போம்? நமது மிடில் ஆர்டர் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. டாப் ஆர்டர் சிறப்பாக ஆடினால் மட்டுமே, நாம் பாராட்டத்தக்க ஸ்கோரை பெற முடிகிறது. 

டாப் ஆர்டர் தோல்வியடையும் போதெல்லாம் நமது அணி முற்றிலும் சரிந்துவிடுகிறது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இப்போது இரண்டு அணிகள் உள்ளன. ஆனால், நாம் நம்முடைய மெயின் அணியை வைத்த ஒழுங்காக விளையாட தடுமாற வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை