கம்மின்ஸை தொடர்ந்து நிதியுதவி அளித்த ஆஸி வேகப்புயல்!
இந்தியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ, இந்திய அரசிற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒரு பிட் காயினை ( இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சம்) நிதியுதவியாக அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரெட் லீ, “இந்தியா எனக்கு இரண்டாவது தாய்நாடு. இங்கு கிரிக்கெட் விளையாடியபோது மக்கள் என் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள். தற்போதுவரை அது தொடர்கிறது. இங்குள்ள மக்கள் தற்போது கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
இந்த இக்கட்டான நிலையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதன்படி, எனது ஒரு பிட் காய்னை இந்தியாவுக்கு நிதியுதவியாக அளித்துள்ளேன். நோயுற்ற மக்களுக்கு ஆக்ஸிஜன் வாங்க இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும். இந்திய மக்கள் அனைவரும் அரசு உத்தரவை மதித்து நடந்துகொள்ளுங்கள். முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்குமுன் பாட் கம்மின்ஸ் 37 லட்ச ரூபாய் நிதியுதவியாக அளித்திருந்தார். அப்போது, ‘மற்ற வீரர்களும் இதே போன்ற உதவ, எனது பங்களிப்பு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரெட் லீ தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.