IND vs AUS 2nd T20I: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் காட்டடி; சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைசா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்த மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி, இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார்.
3ஆம் வரிசையில் இறங்கிய மெக்ராத்தும் அவருடன் இணைந்து அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.பெத் மூனி மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆட, கடைசி வரை இவர்களின் விக்கெட்டை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. பெத் மூனி 54 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 82 ரன்களையும், மெக்ராத் 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 70 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 187 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 188 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 23 பந்துகளில் ஒரு சிக்சர் 4 பவுண்டரிகள் என 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி எதிரணி பந்துவீச்சை பிரித்து மேய்ந்தர். இதில் ஸ்மிருதி மந்தனா தனது 19ஆவது டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் என 79 ரன்களைச் சேர்த்த நிலையில் எதிர்பாராதவிதமாக போல்டாகி பெவிலியன் திரும்பினார். ஏறத்தாழ இந்திய அணி இப்போட்டியில் தோல்வியைத் தழுவியது என நினைத்த நிலையில், ரிச்சா கோஷ் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கூட்டினார்.
இறுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வைத்யா ஒரு பவுண்டரியை விரட்ட, அடுத்தடுத்த பந்துகளில் இந்திய அணி 4 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் கடைசி பந்தில் இந்திய அணிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் வைத்திய் மீண்டும் ஒரு பவுண்டரியை விளாசி ஆட்டத்தை சமனில் முடித்து வைத்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் இந்திய அணி தரப்பில் ரிச்சா கோஷ் - ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹீதர் கிரஹாம் பந்துவீசினார். ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரிச்சா கோஷ் இமாலய சிக்சரை பறக்கவிட்டு தொடங்கினார். அதன்பின் இரண்டாவது பந்தையும் பவுண்டரி விளாச முயற்சித்த ரிச்சா கோஷ் கிரஹாமிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் சிங்கிள் எடுக்க, நான்காவது பந்தில் ஸ்மிருதி மந்தனா பவுண்டரியையும், ஐந்தாவது பந்தை சிக்சரையும் பறக்கவிட்ட அவர், கடைசி பந்தையும் சிக்சர் அடித்தார் என நினைத்த தருணத்தில் பெத் மூனியின் அபாரமான ஃபீல்டிங்கால் கடைசி பந்தில் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் 20 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - கார்ட்னர் ஆகியோர் களமிறங்க, இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் பந்துவீசினார். ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய ஹீலி, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தை சந்தித்த கார்ட்னர் சிக்கர் அடிக்க முயற்சித்து மிட் ஆஃப் திசையில் இருந்த ராதா யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.
அடுத்த பந்தை சந்தித்த தஹிலா மெக்ராத் சிங்கிள் எடுக்க, ஐந்தாவது பந்தை சந்தித்த ஹீலி மீண்டும் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய வெற்றிபெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அலிசா ஹீலி சிக்சர் அடித்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. அதேசமயம் நடப்பாண்டில் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு முதல் தோல்வியையும் பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.