வெற்றியின் அருகில் வரை சென்றது மகிழ்ச்சியளிக்கிறது - ரேஜிஸ் சகப்வா!
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 130 ரன்களும், இஷான் கிஷன் 50 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக அந்த அணியின் பிராட் எவான்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சியான் வில்லியம்ஸ் 45 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காவிட்டாலும், மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட சிக்கந்தர் ரஸா மளமளவென ரன்னும் குவித்ததன் மூலம், கடைசி இரண்டு ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை ஜிம்பாப்வே அணி வந்தது.
போட்டியின் 19ஆவது ஓவரை விசீய ஷர்துல் தாகூர் அந்த ஓவரை மிக சிறப்பாக வீசியதோடு, இந்திய வீரர்களுக்கு பயம் காட்டிய சிக்கந்தர் ரசாவின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரேஜிஸ் சகப்வா, சிறப்பாக விளையாடி வெற்றியின் அருகில் வரை வந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,“வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எங்கள் அணியின் சிக்கந்தர் ரசா மற்றும் பிராட் எவான்ஸ் ஆகியோர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும் நாங்கள் வெற்றியின் அருகில் வரை வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் பதற்றத்துடன் இருந்தனர். எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். இந்த தொடரின் மூலம் நாங்கள் அதிகமான விசயங்களை கற்று கொண்டோம், குறிப்பாக மூன்றாவது போட்டியின் மூலம் எங்களுக்கு பாசிட்டிவ்வான விசயங்கள் நடந்துள்ளது. எங்கள் விளையாட்டை முன்னேற்றி கொள்ளவே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.