பாக்ஸிங் டே டெஸ்ட்: சரிவை சந்திக்கும் இந்தியா!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 123 ரன்களை குவித்தார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இங்கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டதால், 3ஆம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் தான் இந்திய அணி ஆல் அவுட்டானது. முதல் செசனில் அரை மணி நேரம் இருக்க, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை இழந்தது.
இதையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய சிறுதி நேரத்திலேயே ஷர்துல் தாக்கூர், கேஎல் ராகுல் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா 12 ரன்களுடன் விளையாடி வருகிறார்.