பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றிக்கு அருகில் இந்தியா; போராடும் தெ.ஆப்பிரிக்கா!
இப்போட்டியின் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு சுருண்டது. 130 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டீன் எல்கர் 77 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
இதனால் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் டெம்பா பவுமா 34 ரன்களுடனும், மார்கோ ஜான்சென் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இன்னும் இந்திய அணி வெற்றிபெற 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.