இந்திய அணியின் பீல்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டது. அதன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில், அதுவும் 208 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணி பீல்டிங் மிக மோசமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,“தற்போதைய இந்திய அணி பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 6 வருட இந்திய அணியை எடுத்து பார்த்தால் பீல்டிங்கில் குறையே சொல்ல முடியாத அணியாகவே இருந்தது, ஆனால் தற்போதைய இந்திய அணி அப்படியல்ல. யாருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பீல்டிங்கில் செயல்படுவது இல்லை.
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கும் முக்கிய காரணம், பீல்டிங்கில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்படுவது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்தார்.