உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்ததன் மூலம் நம்பர் ஒன் இடத்தையும் இழந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி 64.58 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் தோல்வியைத் தழுவியதன் முலம் நியூசிலாந்து அணி 60 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலிய அணி 59 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேசமயம் வங்கதேசம் 50 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், பாகிஸ்தான் அணி 36.66 சதவீதத்துடன் 5ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 33.33 சதவீதத்துடன் 6ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்.