NZ vs AUS, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றி!

Updated: Sun, Mar 03 2024 12:53 IST
NZ vs AUS, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றி! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கிளென் பிலீப்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய கிளென் பிலீப்ஸின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலீப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை துரத்திவரும் நியூசிலாந்து அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் இதில் ரச்சின் ரவீந்திரா 59 ரன்களையும், டேரில் மிட்செல் 12 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 59 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டேரில் மிட்செலும் 38 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசிலாந்து அணி 196 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நாதன் லையன் 6 விக்கெட்டுளை கைப்பற்றினார். 

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 8ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை