ஆசியா கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுக்கு அபராதம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி அசத்தியது.
இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டன. அதனால் ஜெஃப் க்ரூவ் தலைமையிலான ஐசிசி எலைட் பேனல், இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் போட்டி ஊதியத்தில் 40 சதவிகிதத்தை அபராதமாக விதித்துள்ளது. இரு அணி வீரர்களுக்கும் தலா 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.