ENG vs IND, 5th Test: 284 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா; வலுவான முன்னிலை!

Updated: Sun, Jul 03 2022 20:52 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து  இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட்  போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த் (146) மற்றும் ஜடேஜாவின்(104) சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை 2ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரின் விக்கெட்டையும் இழந்தது. இருவருமே ஒற்றை இலக்கத்தில் பும்ராவின் பந்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஆலி போப்பும் 10 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட்(31), ஜாக் லீச்சும்(0) ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. 3ஆம் நாள் ஆட்டத்தை பென் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 25 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த சாம்பில்லிங்ஸும் நன்றாக பேட்டிங் ஆடினார்.

சிறப்பாக பேட்டிங் ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். ஆனால் சதத்திற்கு பின் அவரை சோபிக்கவிடாமல் 106 ரன்களுக்கு வீழ்த்தினார் ஷமி. அதன்பின்னர் ஸ்டூவர்ட் பிராட் ஒரு ரன்னிலும், மேட்டி பாட்ஸ் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில்  அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

132 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா - ஹனுமா விஹாரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை