WI vs IND, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த த்ரில் வெற்றிகளை பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று இரவு 7 மணிக்கு சம்பிரதாயமாக 3வது போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிகர் தவான் – சுப்மன் கில் தொடக்க ஜோடி மீண்டும் ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தது. ஏற்கனவே தொடரை இழந்த சோர்வில் சுமாராக பந்துவீசிய வெஸ்ட் இண்டீசை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது 7 பவுண்டரியுடன் 58 (74) ரன்களில் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.
அதனால் 24 ஓவரில் 115/1 ரன்களை எடுத்து இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கி ஓய்ந்த நிலையில், போட்டியை தொடங்கியபோது மீண்டும் வந்தது. ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து மழை நின்றதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கிய போது 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – கில் உடன் இணைந்து மீண்டும் 82 பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.
33 ஓவர்கள் வரை அசத்திய இந்த ஜோடியில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (34) ரன்களில் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 (6) ரன்களில் மீண்டும் ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கியதால் 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
இறுதியில் முதல் இன்னிங்ஸ் முடியும் நேரம் வரை மழை கொட்டி தீர்த்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி போட்டி மீண்டும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 257 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வெறும் இரண்டு ரன்களில் சுப்மன் கில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை நழுவவிட்டு ஏமாற்றமடைந்தார்.
அதை தொடர்ந்து சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க சேசிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 2-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் கெய்ல் மேயர்ஸ் 0 (1), சமர் ப்ரூக்ஸ் 0 (2) என முதல் 3 பந்துகளில் 2 முக்கிய வீரர்களை அடுத்தடுத்து டக் அவுட் செய்து இந்தியாவுக்கு மிரட்டலான தொடக்கம் கொடுத்தார்.
அதனால் 0/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணியை 3ஆவது விக்கெட்டுக்கு 47 பார்ட்னர்ஷிப் அமைத்த ஷாய் ஹோப் கடந்த முறை சதமடித்த நிலையில் இம்முறை சஹால் சுழலில் 22 (33) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலைமையில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்டினாலும் எதிர்ப்புறம் வந்த கார்ட்டி 5 (17) ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார். அந்த நிலையில் பூரனும் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (32) ரன்களில் பெரிய ரன்களை எடுக்காமல் நடையை கட்டினார்.
இததனால் 119/6 என மேலும் சரிந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் ஒருபுறம் 9* (12) எடுக்க எதிர்ப்புறம் இருந்த வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் 26 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 137 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களையும் சிராஜ் மற்றும் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதன்மூலம் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 119 ரன்கள் வித்தியாசத்தில் இம்முறை இந்தியா மெகா வெற்றி பெற்றது. மேலும் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை சாதித்து காட்டியுள்ளது.