அடுத்தாண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா!
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் இந்த மோசமான ஆட்டத்தின் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அந்நாட்டு அரசின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு சமீபத்தில் தடை விதித்தது. மேலும் இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரையும் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றியது. எனினும் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு இலங்கை அணி பங்கேற்க உள்ள போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டி, 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டி 21 டி 20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.