பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு; ரசிகர்கள் கண்டனம்!

Updated: Tue, Dec 06 2022 22:16 IST
Image Source: Google

பார்வையற்றவர்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் தொடங்கவிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வருமா என்பது சந்தேகமாக இருந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அரசு விசா தராமல் நிராகரித்துள்ளது. இது இரு நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில், இந்தியாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியை நிலைகுலைய வைத்துள்ளது. விளையாட்டை அரசியலுடன் இந்தியா கலக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள அந்த வாரியம், இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பார்வையற்றவர்களுக்கான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி கடந்த 2 முறையும் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வி அடைந்தது. தற்போதைய பார்வையற்றவர்களுக்கான டி20 உலக சாம்பியனான இந்தியாவை கடைசியாக விளையாடிய ஐந்து முறை தொடர்ச்சியாக வீழ்த்தியதால், இந்த தொடரில் பாகிஸ்தான் முக்கியமான அணியாக கருதப்பட்டது. தற்போதைய உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதியிருக்க கூடும். ஆனால் தற்போது அது நடைபெறாமல் போய்விட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் பங்கேற்க முடியாத காரணத்தால், பார்வையற்றவர்களுக்கான டி20 உலககோப்பை தொடர் அட்டவணை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இரு நாட்டுக்கும் இடையே உள்ள அரசியல் காரணங்களால், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாகிஸ்தான், அப்படி இந்தியா விலகினால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலககோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது. தற்போது, இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் அணிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இரு அணிகளும் இருத்தரப்பு தொடரில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது ஐசிசி தொடர்களிலும் மோதாமல் போகும் சூழல் உருவாகி உள்ளது. இது கிரிக்கெட்டுக்கு நல்லது அல்ல என்று பல்வேறு தரப்பு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை