இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.
அதேசமயம் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்த ஷஃபாலி வர்மா டி20 அணியில் வாய்ப்பு பெற்ற நிலையில், ஒருநாள் அணியில் வாய்ப்பை இழந்துள்ளார். அதேசமயம் பிரதிகா ராவல் ஒருநாள் அணியில் மட்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். இதுதவிர்த்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீ சாரணி, ஸ்நே ரானா, கிராந்தி கௌத், சுச்சி உபாத்யாய் மற்றும் சாயாலி சத்காரே உள்ளிட்டோரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே
இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து - இந்தியா மகளிர் தொடர் அட்டவணை
- முதல் டி20: ஜூன் 28, நாட்டிங்ஹாம்
- இரண்டாவது டி20: ஜூலை 1, பிரிஸ்டல்
- மூன்றாவது டி20: ஜூலை 4, கென்னிங்டன் ஓவல்
- நான்காவது டி20: ஜூலை 9, மான்செஸ்டர்
- ஐந்தாவது டி20: ஜூலை 12, பர்மிங்காம்
- முதல் ஒருநாள் போட்டி: ஜூலை 16, சவுத்தாம்ப்டன்
- இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜூலை 19, லார்ட்ஸ்
- மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜூலை 22, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்