இந்தியா vs ஆஸ்திரேலிய, முதல் டி20 - போட்டி முன்னோட்டம்!

Updated: Tue, Sep 20 2022 13:15 IST
India vs Australia, 1st T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்தத் தொடரானது அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் தற்போதைய தொடரின் வாயிலாக நடுவரிசை பேட்டிங் மற்றும் 6-வது பந்து வீச்சாளர் பிரச்சினைக்கு இந்திய அணி தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்ட போதிலும் அதிக மாற்றங்களை செய்தது. பந்து வீச்சில் உள்ள குறைகள் இந்தத் தொடரில் வெளிப்பட்டது. தற்போது ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால் பந்து வீச்சுத்துறை வலுப்பெறக்கூடும்.

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்திருந்தார். பார்முக்கு திரும்பியிருப்பதால் ஆஸ்திரேலிய தொடரில் அவரை தொடக்க வீரராக களமிறக்கி இந்திய அணி நிர்வாகம் சோதித்து பார்க்கக்கூடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்துவதா? அல்லது ரிஷப் பந்த்தை பயன்படுத்துவதா? என்பதற்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்துள்ளதால் இடது கை பேட்ஸ்மேன் தேவையை கருத்தில் கொண்டு ரிஷப் பந்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடும். தீபக் ஹூடா, ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடினார். ஆனால் அணியில் அவரது பங்கு குறித்து தெளிவின்மை உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் ஜடேஜா காயம் அடைந்ததால் இந்திய அணியின் பந்து வீச்சு சீர்குலைந்தது. 6 பந்துவீச்சு விருப்பங்களிலிருந்து, 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஹர்திக் பாண்டியாவுடன் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் படேலுடன் இந்திய அணி களமிறங்கினால் கூடுதல் பந்துவீச்சாளர் கிடைக்கக்கூடும். இந்த வகையில் அக்சர் படேல், யுவேந்திர சாஹல் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்படலாம். ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சுத்துறையை பலப்படுத்தலாம்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் முன்னணி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிரானதொடரை சந்திக்கிறது. மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு சிறிது பின்னடைவை தரக்கூடும். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் ஆரோன் பின்ச் மீது அனைவரது கவனமும் எழுந்துள்ளது.

மோசமான பார்ம் காரணமாகவே ஒருநாள் போட்டியில் இருந்து பின்ச் ஓய்வு பெற்றிருந்தார். சொந்த மண்ணில் டி 20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரன்கள் குவிப்பதில் ஆரோன் பின்ச் முனைப்பு காட்டக்கூடும். மேலும் மிகவும் கவனத்தை ஈர்க்கக்கூடிய வீரராக பவர்-ஹிட்டர் டிம் டேவிட் இருக்கக்கூடும்.

சிங்கப்பூருக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவர், சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதற்கு அனுமதியை பெற்றுள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர், தொடக்க வீரராக அறிமுகமாகக்கூடும். டிம் டேவிட் உலகெங்கிலும் உள்ள டி 20 லீக்குகளில் தனது செயல்திறன் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். அதை அவர், உயர்ந்த மட்டத்தில் பிரதிபலிக்க முயற்சி செய்யக்கூடும்.

உத்தேச அணி

இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல் / ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச் (கே), ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட், சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை