இந்தியா - நியூசிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டி அணியின் வருங்கால கேப்டனான உருவெடுக்க வசதியாக ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. ரஞ்சி போட்டியில் அசாமுக்கு எதிரான ஆட்டத்தில் 379 ரன்கள் குவித்து சாதனை படைத்ததன் மூலம் பிரித்வி ஷா அணிக்கு திரும்பி இருக்கிறார். பந்து வீச்சில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிரட்டல் அளிக்கக்கூடியவர்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் (31, 14 ரன்கள்) எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் எப்போதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவர். அவரது அதிரடி ஜாலம் இந்த தொடரிலும் தொடரும் என்று நம்பலாம். இதேபோல் கடந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி சொதப்பிய இஷான் கிஷன் தனது அதிரடி திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அவர் ஷுப்மன் கில்லுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ஒருநாள் தொடரில் 360 ரன்கள் குவித்த ஷுப்மன் கில் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மணிக்கட்டு காயத்தால் அவதிப்படும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இருந்து விலகினார். கடைசியாக விளையாடிய 11 இருபது ஓவர் போட்டி தொடர்களில் தொடரை இழக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரை போல் இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய டெவான் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலென், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் லோக்கி ஃபெர்குசன், பிளேர் டிக்னெர், ஜேக்கப் டஃபி, சோதி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி அதற்கு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். டி20 போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இந்த தொடரில் குறைந்தபட்சம் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் தனது நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உத்தேச லெவன்
இந்தியா – ஷுப்மான் கில், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர்/குல்தீப் யாதவ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், டேவ் கிளீவர், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கே), லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேர் டிக்னர்.
உத்தேச லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே
- பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், பிரித்வி ஷா
- ஆல்ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - லாக்கி பெர்குசன், இஷ் சோதி, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்/உம்ரான் மாலிக்/குல்தீப் யாதவ்