IND vs SA, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
கடந்த 2 மாதங்களாக பரபரப்பான திரில் போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் வெற்றியை சுவைப்பதற்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த தொடர் முழுவதும் ரசிகர்களுக்கு பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் விருந்தாக அமையும் என்று நம்பலாம்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணி - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இத்தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் பலத்திற்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். ஏனெனில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டிய மாஸ் கம் பேக் விடுத்துள்ள ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களுடன் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் ஆகிய இளம் வீரர்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
அதுபோக ஸ்ரேயஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், சஹால் என ஐபிஎல் தொடரில் அசத்தி சூப்பரான பார்மில் இருக்கும் வீரர்கள் இந்திய அணியில் நிறைந்து காணப்படுகின்றனர். மேலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக இத்தொடரில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதைவிட இந்தியா எப்போதுமே தனது சொந்த மண்ணில் வலுவான ராஜாவைப் போல எதிரணிகளை சொல்லி அடித்து வருவதால் இந்த தொடரிலும் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்று கோப்பையை முத்தமிடும் என்று நம்பலாம்.
அத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒருநாள் தொடரில் தங்களுக்கு 3 – 0 என்ற வைட்வாஷ் தோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்காவுக்கு இம்முறை சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.
டெம்பா பவுமா தலைமையில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இந்த தொடரில் இந்தியாவிற்கு சவாலைக் கொடுத்து கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு தயாராகி உள்ளது. ஏனெனில் அந்த அணியில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டிய டேவிட் மில்லர், குயின்டன் டி காக், ககிஸோ ரபாடா போன்ற மேட்ச் வின்னர்கள் தேவையான அளவு உள்ளனர். அத்துடன் மேற்குறிப்பிட்ட வீரர்கள் கடந்த பல வருடங்களாக இந்திய ஆடுகளங்களில் விளையாடி இந்திய கால சூழ்நிலைகளை தெரிந்து வைத்துள்ளவர்கள்.
மேலும் கடந்த ஜனவரியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த புத்துணர்ச்சி இன்னும் தென் ஆப்பிரிக்காவிடம் காணப்படுகிறது. எனவே இந்த தொடரில் அந்த அணி இந்தியாவிற்கு கடுமையான சவாலை கொடுத்து கோப்பையை வெல்வதற்கு முழுமூச்சுடன் போராட என்று நம்பலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 15
- இந்தியா வெற்றி - 9
- தென் ஆப்பிரிக்க வெற்றி - 6
உத்தேச அணி
இந்தியா - இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்.
தென் ஆப்பிரிக்கா - டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குயின்டன் டி காக்
- பேட்டர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஐடன் மார்க்ரம்
- பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா