IND vs SL: இந்திய அணியில் இடம்பிடிக்க மூவருக்கு இடையே கடும் போட்டி!
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 4-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 12 முதல் 16-ந் தேதி வரை பெங்களூரில் பகல்-இரவாக நடக்கிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டியில் புஜாரா 3ஆவது வரிசையிலும், ரஹானே 5ஆவது வரிசையிலும் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். தற்போது இருவரும் நீக்கப்பட்டுள்ளதால் அந்த வரிசையில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
சுப்மன்கில் 3ஆவது வீரர் வரிசைக்கு பொருத்தமானவராக கருதப்படுகிறது. அவர் அகர்வாலுடன் இணைந்து தொடக்க வரிசையில் விளையாடி வருகிறார். ரோகித்சர்மா டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று உள்ளதால் அவர் அகர்வாலுடன் தொடக்க வீரராக ஆடுவார்.
இதனால் தொடக்க வீரரான சுப்மன் கில் 3ஆவது வரிசையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசைக்கு அவர் பொருத்தமானவர் என்று தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினரான தேவங்காந்தி தெரிவித்துள்ளார்.
ரஹானேவின் இடமான 5ஆவது வரிசையில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கேப்டன் விராட் கோலி 4ஆவது வரிசையில் களம் இறங்குவார். விகாரி 6ஆவது வரிசையில் ஆடுவார்.
11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சுப்மன்கில், விஹாரிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மன்கில், விராட்கோலி, ரிஷப் பந்த், விகாரி, ஜடேஜா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சவுரப் குமார், பிரியங் பாஞ்சல், ஸ்ரீகர்பரத்.