IND vs WI: சாதனைப் பட்டியலை நீட்டிக்கும் கோலி!
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைக்க உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை பட்டியல் என்று ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு , அவரது சாதனை பட்டியல் இருக்கும். இந்த நிலையில், விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாகவே அவரை போலவே விளையாட வில்லை. கோலி என்றால் ரன் மிஷின் என்று அர்த்தம்.
ஆனால் அந்த ரன் மிஷினுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருடைய 71ஆவது சதம் இன்று வரும், நாளை வந்துவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம், கோலியின் பலமே ஒருநாள் போட்டி தான். அதில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா போதிய ஆட்டங்களில் விளையாடவில்லை.
விராட் கோலி தொடர்ந்து ஒரு 10 ஒருநாள் போட்டியில் விளையாடினால், அவர் தனது பழைய ஃபார்மை மீட்டு எடுப்பார். இந்த நிலையில், விராட் கோலி ஒரு புதிய சாதனை மைல்கல்லை எட்ட போகிறார். ஆம், இந்தியாவில் நாளை தனது 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார் விராட் கோலி.
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 164 போட்டிகள், தோனி 127 போட்டிகள், அசாரூதீன் 113 போட்டிகள், யுவராஜ் சிங் 108 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்த மைல்கல்லை எட்டும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி எட்ட உள்ளார். இதனால் இந்த விசேஷ நாளில் தனது 71ஆவது சதத்தை பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவில் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 5,002 ரன்கள் அடித்துள்ளார். இதில் 19 சதம், 25 அரைசதம் அடங்கும். மேலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2243 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும்.