மகளிர் ஆசிய கோப்பை 2022: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
எட்டாவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் காலை முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 13, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 27 என குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 ரன்களோடும், அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. தாய்லாந்து அணி தரப்பில் சொர்ணரின் டிப்போச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தாய்லாந்து அணி கடந்த போட்டியைப் போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நருமோல் சாய்வாய், நாட்டாய பூச்சாதம் ஆகியோர் தலா 21 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் தாய்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.