மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பிரதிகா ராவல் விலகல்; ஷஃபாலிக்கு வாய்ப்பு!
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியானது நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்திருந்தது. இதுபோன்ற சூழலில் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை பிரதிகா ராவல் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியின் போது பிரதிகா ராவல் தனது காலில் காயத்தை சந்தித்தார். இதையடுத்து அவர் உடனடியாக பெவிலியன் திரும்பியதுடன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது ஸ்கேன் பரிசோதனை முடிவில், அவரது காயம் தீவிரமடைந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பிரதிகா ராவல், நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு சீசனில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் நடப்பு சீசனில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் அணியில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடரில் இருந்து விலகிய பிரதிகா ராவலுக்கு பதிலாக ஷஃபாலி வர்மா மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கூடுதல் வீராங்கனை பட்டியலில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய மகளிர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வர்மா*, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, சினே ராணா, அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர்