மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்த இந்தியா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது நவி மும்பையில் உள்ள டி ஓய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தர்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிய ஷஃபாலி வர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்களுக்கும், அமஞ்சோத் கவுர் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தீப்தி சர்மா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 58 ரன்களையும், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா காகா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணையும் அபாரமான தொடக்கத்தை வழங்கினார். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தஸ்மின் பிரிட்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அன்னேஷ் போஷும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு களமிறங்கிய சுனே லூஸ் 25 ரன்களையும், மரிஸான் கேப் 4 ரன்னிலும், சினோலா ஜாஃப்டா 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வோல்வார்ட்டுடன் இணைந்த அன்னேரி டெர்க்சன் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபாரமாக விளையாடிய லாரா வோல்வார்ட் சதம் விளாசி அசத்தினார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த் அன்னேரி டெர்க்சனும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: LIVE Cricket Score
அவரைத் தொடர்ந்து 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களில் வோல்வார்ட் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதுடன், வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது.