மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
IND-W vs PAK-W, WCWC 2025: பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியின் வீராங்கனைகள் கிராந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து 31 ரன்களில் பிரதிகா ராவலும், 19 ரன்களில் ஹர்மன்ப்ரீத் கவுரும் விக்கெட்டுகளை இழந்தனர். இந்த போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிரங்கிய ஹர்லீன் தியோல் 46 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு களமிறங்கிய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 35 ரன்களையும், தீப்தி சர்மா 25 ரன்களையும், ஸ்நே ரானா 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்துக் கொடுத்தனர்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் டையான பெய்க் 4 விக்கெட்டுகளையும், சதியா இக்பால், ஃபாத்திமா சனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் முனீபா அலி, சதாப் ஷமாஸ், அலியா ரியாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் இணைந்த சித்ரா அமீன் - நடாலியா பெர்வைஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், நடாலியா பெர்வைஸ் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஃபாத்திமா சனா, சித்ரா நவாஸ், ரமீன் ஷமிம் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த சித்ரா அமீன் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 81 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களில் ஆல் ஆவுட்டானது. இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.