ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
IN-W vs SL-W, WCWC 2025: மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மா, பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகி விருதை வென்றார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது நேற்று (செப் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கிடது. இதன் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ரவால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரதிகாவுடன் இணைந்த ஹர்லீன் தியோ சிறப்பாக செயல்பட்டு ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் பிரதிகா ராவல் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்லீன் தியோல் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்னிலும், ரிச்சா கோஷ் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தானர். பின்னர் இணைந்த தீப்தி சர்மா - அமஞ்சோத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், அணியையும் சரிவிலிருந்து மீட்டனர். பின்னர் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் தீப்தி சர்மாவும், 57 ரன்களைச் சேர்த்த நிலையில் அமஞ்சோத் கவுர் 57 ரன்களையும் சேர்த்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்நே ரானா 28 ரன்களை எடுத்திருந்தார். அதேசமயம் மழை குறுக்கீடு காரணமாக இந்த போட்டியின் ஓவர்ளானது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் இனோக ரனவீரா 4 விக்கெட்டுகளையும், பிரபோதானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹர்ஷிதா சமரவிக்ரமா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சமாரி அத்தபத்து 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் 29 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Also Read: LIVE Cricket Score
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் நிலாக்சி டி சில்வா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியதுடன், உலகக் கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.