மகளிர் ஐபிஎல் தொடருக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ!

Updated: Wed, Oct 19 2022 09:24 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91ஆவது வருடாந்திர கூட்டம் அக்டோபர் 18ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவி காலம் முடிவடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக 1983 உலக கோப்பை வென்ற அணியில் இடம் வகித்த முன்னாள் நட்சத்திர வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐயின் 36வது புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

அவருடன் துணைத்தலைவராக ராஜீவ் சுக்லா, துணை செயலாளராக தேவ்ஜித் சைக்கா, பொருளாளராக ஆஷிஷ் சீலர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இருப்பினும் செயலாளராக இருந்த ஜெய் ஷா தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கிறார்.

அந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு சௌரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்த நிலையில் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிந்து முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்த முயற்சிக்க உள்ளதாக புதிய தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்தார். 

அத்துடன் வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் பிட்ச்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அந்த கூட்டத்தின் முடிவில் சில முக்கியமான முடிவுகளும் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 90களில் எப்படி ஆடவர் அணி திண்டாடியதோ அதே போல் தற்சமயத்தில் திண்டாடும் இந்திய மகளிரணி இது வரை ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவிக்கிறது. அதனால் தற்போது ஆடவர் கிரிக்கெட் கொடிகட்டிப் பறப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மகளிர் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கிய முடிவாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையாக 8 அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆடவர் ஐபிஎல் தொடர் இன்று 10 அணிகள் விளையாடும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் மகளிர் கிரிக்கெட் தொடர் தற்போது வரை பல காரணங்களால் தொடங்கப்படவில்லை. பிசிசிஐயிடம் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் இன்று நடந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் மகளிர் ஐபிஎல் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி எந்த தடையும் இன்றி அடுத்த ஆண்டே மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் டி20 சேலஜ் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை