பிரஷித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு? ரசிகர்கள் கோரிக்கை!

Updated: Sun, Jul 24 2022 13:23 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 308 ரன்கள் குவித்த வேளையில் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 305 ரன்கள் மட்டுமே குவித்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் நிச்சயம் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக அறிமுக வீரராக அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏனெனில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பிரசித் கிருஷ்ணா ஒரே மாதிரியான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக பெரும்பாலும் ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை பயன்படுத்தும் அவருக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் மைதானம் அதிகளவில் கைகொடுக்கவில்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 62 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

எனவே அவருக்கு பதிலாக பல்வேறு வெரியேஷன்களுடன் பந்து வீசும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஆதரவு பெருகி வருகிறது. அர்ஷ்தீப் சிங் யார்க்கர், ஸ்லோ பால், பவுன்சர், கட்டர் என பல்வேறு வெரைட்டியுடன் பந்து வீசுவார் எனவே நிச்சயம் அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்து அவருக்கான அறிமுக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகவும் கச்சிதமாக பந்துவீசிய 23 வயதான அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் அறிமுகமாகி அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை