இந்திய வீரர்களில் அச்சம் எதனால்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் நேற்றைய பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.
எனினும் இன்று மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகமானால் என்ன செய்வது என அவர்கள் அச்சப்பட்டார்கள். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்த முடிவில் 5ஆவது டெஸ்ட் ரத்துசெய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட 5ஆவது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த விரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் என்ன காரணத்துக்காக 5ஆவது டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள் என்பதை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “நான் அணியில் உள்ள சிலரிடம் பேசினேன். 4ஆவது டெஸ்டுக்குப் பிறகு அனைவரும் சோர்வடைந்து விட்டார்கள். கிட்டத்தட்ட எல்லா டெஸ்டுகளும் கடைசி வரை சென்றன. அதனால் அவர்கள் சோர்வடைந்து விட்டார்கள். அவர்கள் வசம் ஒரு பிசியோதெரபிஸ்ட் தான் தற்போது உள்ளார். இருவர் இருந்தார்கள். ஆனால் ஒருவரைத் தனிமைப்படுத்தினார்கள். சில பயிற்சியாளர்கள் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே இருந்த ஒரு பிசியோதெரபிஸ்டிடம் அனைவரும் பணியாற்றியுள்ளார்கள். இப்போது அவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதுதான் பிரச்னை. அணி ஊழியர்களில் வேறு யாருக்காவது கரோனா ஏற்பட்டிருந்தால் இந்தளவுக்குப் பயந்திருக்க மாட்டார்கள். ஆனால் அனைவருக்கும் சிகிச்சை செய்த பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா என்றவுடன் வீரர்கள் மிகவும் பயந்து விட்டார்கள்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதையும் புரிந்துகொள்ள வேண்டும். 5ஆவது டெஸ்ட் முடிந்த பிறகு அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாடச் செல்கிறார்கள். அதன்பிறகு டி20 உலகக் கோப்பை. பிறகு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் உள்ளது. ஒரு வார இடைவெளியில் அவர்களால் எத்தனை கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.