கவுண்டி கிரிக்கெட்: இரட்டைச் சதம் விளாசி புஜாரா அசத்தல்!
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டெர்பிஷைர் சீனியர் - சசெக்ஸ் சால்வேஜ் அணிகள் மோதி வருகின்றன. சசெக்ஸ் சால்வேஜ் அணிக்காக இந்த தொடரில் இந்திய வீரர் புஜாரா அறிமுகமானார். முதலில் விளையாடிய டெர்பிஷைர் சீனியர் அணி முதல் இன்னிங்ஸில் 505 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய சசெக்ஸ் சால்வேஜ் அணி பெரிய அளவில் சோபிக்காமல் திணறியது. 56.3 ஓவர்களில் 174 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ஃபாலோ ஆன் ஆனது. புஜாரா முதல் இன்னிங்ஸில் 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாவது நாளில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியபோது சசெக்ஸ் சால்வேஜ் அணி அபாரமாக விளையாடியது. தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்து டிரா செய்யும் அளவுக்கு அட்டகாசமாக நிலைத்து நின்று விளையாடியது. 2ஆவது இன்னிங்ஸில் 176.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 513 ரன் எடுத்து டிரா செய்தது சசெக்ஸ் அணி.
புஜாரா நிலைத்து விளையாடி வெகு நாட்களுக்கு பிறகு சதம் கடந்து , அதை இரட்டைச் சதமாக்கினார். 387 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்து அசத்தினார் புஜாரா. 23 பவுண்டரிகளை விளாசி தன் பழைய ஆட்டத்தை மீட்டெடுத்தார் புஜாரா.
இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் டாம் ஹெய்ன்ஸுடன் 351 (243) ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து புஜாரா விளையாடியதால், ஆட்டம் டிராவில் முடிந்தது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரைத் அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மூத்த பேட்டர் புஜாரா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டைச் சதம் டெஸ்ட் ஆட்டங்களில் அவரின் இருப்பை நிரூபிக்கும் வகையில் அடிக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
எனவே அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் புஜாரா மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.