இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டங்கள் மறுப்பு!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதற்கு இங்கிலாந்து மைதானங்களில் இந்திய அணி எந்தவொரு பயிற்சியும் இன்றி விளையாடியது தான் காரணம் என நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதால், இத்தொடருக்கு முன்னதாக கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம் என முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாடுவதற்காக பிசிசிஐயும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் இத்தொடருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ள நிலையில், இந்திய அணியின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்திய அணி தங்களுக்குளாகவே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.