ரஹானேவிடம் ஆலோசனை கேட்கும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி கடந்த ஜூன் 2ஆம் தேதி இந்திய ஆடவர் அணியுடன் இணைந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.
இதற்கிடையில் அவர்கள் அங்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிகான இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் இந்திய ஆடவர் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவிடம் ஆலோசனைகள் பெற்று வருதாக ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்மன்பிரீத் கவுர், “நாங்கள் எங்கள் அணியில் உள்ள அறிமுக வீராங்கனைகள் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியதில்லை. நாங்கள் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். ரஹானேவுக்கு நிறைய அனுபவம் இருப்பதால், அவரிடம் நாங்கள் ஆலோசனை பெற்று வருகிறோம். அவர் எங்களிடம் இங்கிலாந்து மைதானங்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், எந்த மாதிரியான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற தனது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 16) பிரிஸ்டோலில் நடைபெறவுள்ளது.