ஆடவருக்கு இணையாக மகளிருக்கு போட்டி கட்டணம் - பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறியது.
போட்டிக் கட்டணத்தில் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக மகளிர் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டு வர முடிவு செய்திருப்பது பல வகையிலும் புரட்சிகரமான முடிவாக பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மூத்த மகளிர் கிரிக்கெட் வீரர்கள், ஆண்களுக்கு இணையான போட்டிக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.
பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும். பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு, ஆடவர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
பெண்கள் ஐபிஎல் முதல் சீசன் 2023இல் நடத்தப்படும் என பிசிசிஐ ஏஜிஎம்மில் முடிவு செய்யப்பட்ட சில நாட்களில் இந்த முடிவு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில்,"இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
2017 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் இருந்து இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த அணி 2020ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு சென்றது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதேபோன்ற முடிவை எடுத்தது, மகளிர் தேசிய அணி மற்றும் உள்நாட்டு மகளிர் விளையாட்டு வீரர்கள் ஆண்களுக்கு சமமான போட்டிக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.