பாகிஸ்தான் வீரர்கள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!

Updated: Mon, Dec 20 2021 17:59 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத மேட்ச் வின்னராக இருக்கக் கூடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழரான இவர், தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார்.

வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இனி விளையாடுவார் என்று பலர் கூறிய நிலையில், மீண்டும் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கி மிரள வைத்தார். கூடிய விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் கம்-பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினின் ஒருநாள் கம்-பேக் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘அஸ்வின் தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரர். அவரை நீங்கள் இனி ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று புறந்தள்ளவே முடியாது’ என்று சூசகமாக தெரிவித்துள்ளார். 

இதனால் எதிர் வரும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் என்று பல இளம் சுழற் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்று ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், யாராலும் அஸ்வினின் தரத்துக்கும் கன்சிஸ்டன்ஸிக்கும் அருகில் வர முடியவில்லை.

விளையாட்டைத் தாண்டி களத்துக்கு வெளியேயும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர் அஸ்வின். தன் யூடியூப் சேனல் மூலம் சக கிரிக்கெட் வீரர்களுடனும், சினிமா நட்சித்திரங்களுடனும் தொடர்ந்து உரையாடி மக்களை மகிழ்வித்து வருகிறார் அஸ்வின்.

இப்படி அஸ்வின், சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒரு ரசிகர், ‘தற்போது உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் யார் யார்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அஸ்வின், ‘பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முகமது ரிஸ்வான் பற்றி நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அவரது திறமை குறித்தும், பாகிஸ்தான் அணிக்கு அவர் கொடுக்கும் வலிமை குறித்தும் நான் பலரிடம் சொல்லி வருகிறேன். அதே நேரத்தில் அந்த அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் தான். சமீபத்தில் கூட அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடித்த சதத்தை என்னால் மறக்கவே முடியாது.

இவர்கள் இருவரைத் தவிர ஷாஹீன் ஷா அஃப்ரீடி மிகத் திறமை வாய்ந்த வீரர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எப்போதுமே திறன் வாய்ந்த வீரர்கள் அதிகம். தற்போதும் அது அப்படியே தொடருகிறது’ என்று வெளிப்படையான பதிலைக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை