INDW vs SAW: டெஸ்ட் போட்டிக்கு அனுமதி இலவசம்; டிஎன்சிஏ-வின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Tue, Jun 25 2024 20:38 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாடி வருகிறது.

அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதுடன் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

அதன்படி இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

 

மேற்கொண்டு நடைபெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான டிக்கெட் விற்பனையானது வரும் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், டிக்கெட் விலையானது ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. டிஎன்சிஏவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை