இந்திய அணியில் இதுபோல் ஒன்றை நான் இதுநாள் வரை பார்க்கவில்லை - இன்சமாம் உல் ஹக்!
இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என அனைத்துவிதமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது.
அதனால் தான் இந்திய அணியால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என உலகின் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெறமுடிகிறது. இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இதுதான் என்பதை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. பும்ரா 4 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் அடித்து, 95 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்தை 303 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 2வது இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் பந்துவீச்சைக் கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக்,“இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணி தங்கள் வேகப்பந்துவீச்சை செட் செய்துவிட்டது . பொதுவாக துணைக்கண்ட பவுலர்கள் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டியில் சரியான லைனில் வீசமுடியாமல் திணறுவார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டத்தைப் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சிதைத்துவிட்டனர்.
பும்ரா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தி, இங்கிலாந்தை பின் தங்கவைத்தார். அரைசதம் அடித்த ரூட்டை எந்த சூழலிலும் எளிதாக ஆட விடவில்லை பும்ரா. முகமது ஷமி, சிராஜ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியில் இதுமாதிரியான ஒரு வேகப்பந்து வீச்சு யூனிட்டை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.