ஷாஹீன் அஃப்ரிடி விளையாடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு - இன்சமாம் உல் ஹக் எச்சரிக்கை!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி. 22 வயதே ஆன ஷாஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக வளர்ந்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடி முறையே 99, 62 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பையில் 3 முறை மோதும். இந்நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு கண்டிப்பாகவே பெரும் பின்னடைவாகவே அமையும். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாததால் கவலையில் இருப்பதுடன், பாகிஸ்தான் அணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்று தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், “ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே அழுத்தம் கொடுத்தார். வீரர்களுக்கு காயம் ஏற்படுவதுதான். ஆனால் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு” என்று கூறியுள்ளார்.