பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வாளராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக். தற்போது, 53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார். கடந்த வாரம் தேர்வாளர் பொறுப்பு குறித்து அவர் பேசி இருந்த நிலையில் தற்போது தலைமைத் தேர்வாளராகி உள்ளார். இந்தப் பொறுப்பைக் கவனித்து வந்த ஹாரூன் ரஷீத் கடந்த மாதம் விலகியிருந்தார்.
இன்சமாம், 1991 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். மொத்தமாக 499 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20,580 ரன்கள் குவித்துள்ளார். 35 சதங்கள் இதில் அடங்கும். இந்திய அணிக்கு எதிராக 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,403 ரன்கள் எடுத்துள்ளார். 2003 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை தொடர், ஒருநாள் உலகக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை (2024) தொடர் என முக்கியத் தொடர்கள் வரும் நாட்களில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இன்சமாம் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராகி உள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.