‘என்னடா இது ஐபிஎல் வந்த சோதன’ ஆஸ்திரேலிய எடுத்த முடிவால் புலம்பும் ரசிகர்கள்!
இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்கள் முடிவடைந்ததும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதனை அடுத்து அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் நோக்கில் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் சர்வதேச டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப முடியாது என கூறியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியமும் இதே முடிவைதான் எடுத்துள்ளது. அதனால் மீதமுள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே ஐபிஎல் அணிகள் நம்பியுள்ளன.
இந்த நிலையில், இதற்கும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணி மும்முனை டி20 கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தொடர் நடைபெற்றால் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இத்தொடரில் பங்கேற்பார்கள் என்பதால், ஐபிஎல் தொடருக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அதனால் இந்த டி20 தொடர் நடைபெற்றால், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், கெய்ல், பிராவோ, ரஸ்ஸல் ஆகியோரும், ஆஃப்கானிதான் அணியில் ரஷீத் கான், முகமது நபி, முஜிப் உர் ரஹ்மான் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என்பதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பெரும் சிக்கலை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.