ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 66 ரன்களுக்கு முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். பட்லர் 32 பந்துகளில் 41 ரன்களை குவித்து ராகுல் சாஹர் சூழலில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார்.
அதன்பின் ஜெய்ஸ்வால் 20 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ராகுல் சாஹர் வசமே விக்கெட்டை இழந்தார். சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு 27 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். தொடர்ந்து களத்திற்கு வந்த தூபேவுடன் 50 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் சஞ்சு. இருப்பினும் போல்ட் வேகத்தில் கிளீன் போல்ட் ஆனார் அவர். தூபேவும் 35 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. இதையடுத்து மும்பை அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.