ஐபிஎல் 2021 : வேளிநாட்டு வீரர்கள் பங்கேற்கபதில் தடையில்லை; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு, தற்போது அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் ஐபிஎல் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு படையெடுத்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்திய அணிகள் அங்கு சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில் டி20 உலகக்கோப்பை தொடரும் நெருங்கிவருவதால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதியளிக்காமல் இருந்தன. இதனால் உள்ளூர் வீரர்களை மட்டுமே கொண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியாங்கள் தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளன. இதுகுறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியோடு இத்தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.